யாழ்.பண்டத்தரிப்பில் சுகாதார பிரிவு திடீர் சோதனை, 3 உணவகங்களுக்கு தண்டம், ஒரு உணவகத்திற்கு சீல், 2 வர்த்தகர்களுக்கு பிடியாணை...
பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தினை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ.யொனிப்பிரகலாதன் தலைமையில் , அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது , ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான பொருட்கள் 245 இணை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன் , கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டது.
பிறிதொரு வர்த்தக நிலையம் ஒன்றில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி , கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் காலாவதியான உணவுப்பொருட்கள் வைத்திருந்த மற்றுமொரு உரிமையாளருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
சுகநலத்திற்கு ஒவ்வாத நிலையிலும் காலாவதியான வண்டடித்த மா உப்பு போன்றவற்றை கொண்டு மிக்சர் உற்பத்தியினை மேற்கொண்டவருக்கு 45ஆயிரம் ரூபா விதிக்கப்பட்டது. அதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கு.பாலேந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,
மோசமான நிலையில் உணவகத்தை நடாத்திய இருவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிலையில் இருவரும் நீதிமன்றில் சமூகமளிக்காமையால் இருவரிற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.