SuperTopAds

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை- பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

ஆசிரியர் - Editor II
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை- பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையினால், சுகாதார சீர்கேடு, மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிறைய ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர், இதையடுத்து, அந்த கடந்த மே மாதம் 28ம் தேதி அந்த ஆலை மூடப்பட்டது. நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இறுதியில் ஆலைக்குகே தமிழக அரசு சீல் வைத்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது. இந்த ஆலை மூடப்பட்டால் ஏராளமான ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதுடன், அவர்களின் குடும்பங்களும் மிகவும் சிரமப்படும் என்பதால்,ஆலையை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தது. மேலும் ஆலையை திடீரென மூடிவிட்டதால், ஆலைக்கும், இயந்திரங்களுக்கும் பல்வேறுவிதமான மிரட்டல்கள் வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் சார்பில் அரிமாசுந்தரமும் அரசு தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். அரிமா சுந்தர் வாதிடுகையில் முன் எச்சரிக்கை ஏதும் இன்றி ஆலையை மூடிவிட்டனர். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ஆலையை மூட அரசாணை பிறப்பித்துள்ளது என்றார். அதற்கு வைத்தியநாதன் கூறுகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனை நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டது என்றார். இதையடுத்து நீதிபதி கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வரும் 18 ஆம் தேதிக்குள் தமிழக அரசுபதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.