SuperTopAds

பூணூல் பற்றிய சர்ச்சை கருத்து… கமலுக்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்!

ஆசிரியர் - Editor II
பூணூல் பற்றிய சர்ச்சை கருத்து… கமலுக்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்!

பூணூல் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசனிடம், அவரது ரசிகர் ஒருவர், நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது? என்று கேள்வி டுவிட்டரில் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கமல், நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது. அது என்னை மிகவும் பாதித்த நூல் ‘பூணூல்’. அதனாலேயே அதை தவிர்த்தேன் என்று பதிலை டுவிட்டி இருந்தார் கமல். ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் இந்த பதிலை கமல் தெரிவித்ததாக பல்வேறு தரப்பினர் விமர்சனம் எழுந்தது.

கமலின் இந்த கருத்துக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிராமண சங்க தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கூறும்போது, பிராமணர்களின் அடையாள சின்னமான பூணுாலை, கீழ்த்தரமாக விமர்சித்தது, அவரின் வக்கிர புத்தியை காட்டுகிறது.

பூணுாலை குறைகூற, கமலுக்கு எந்த தகுதியும் கிடையாது. பல்வேறு படங்களில், பிராமணர் வேடத்தில் நடித்து, பணத்திற்காக கலையை விற்கும் வியாபாரியான அவர், தைரியம் இருந்தால் மற்ற சமூகத்தினரை விமர்சித்து பார்க்கட்டும். தேர்தலில் கமல் போட்டியிட்டால், பிராமண சமூகத்தினர் தகுந்த பாடம் புகட்டுவர் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது கூறி வரும் கமல், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.