SuperTopAds

யாழ்.மாவட்டத்திற்கு அனுப்பபட்ட அழுகிய விதை உருளை கிழங்கு! யாழ்.மாவட்டச் செயலர் அதிரடி தீர்மானம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு அனுப்பபட்ட அழுகிய விதை உருளை கிழங்கு! யாழ்.மாவட்டச் செயலர் அதிரடி தீர்மானம்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது .

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட களஞ்சியமொன்றில் வைத்திருந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளில் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

குறித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், திட்ட பணிப்பாளர் குறித்த களஞ்சியசாலையை நேற்று பார்வையிட்டதோடு பெருமளவான உருளைக்கிழங்கு விதைகள் பாதிக்கப்பட்டமையை அவதானித்தனர்.

இது தொடர்பில் அரச விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு, விதைகள் ஆராய்ச்சி பிரிவு, கமலநல அபிவிருத்தி திணைக்களம் என துறை சார்ந்த தரப்புக்களின் பங்கேற்புடன் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று  நடைபெற்றது.

கலந்துரையாடலில் குறித்த நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மாவட்ட செயலாளர் துறைசார் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில், உருளைக்கிழங்கு விதைகள் பாரதூரமான ஒருவகை பக்ரீறீயா பாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பழுதடையாதவற்றை தெரிவு செய்து பாவித்தாலும் மண்ணுக்கும் பயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அதை பயன்படுத்தமாட்டோம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு ஆராயப்பட்ட விடயங்களை குறித்த நவீனமயமாக்கல் திட்ட பிரிவுக்கும் வடக்கு ஆளுநர் மற்றும் விவசாய அமைச்சருக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது 

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்பவைக்கு மாவட்ட மட்டத்தில் கருத்து கேட்பதில்லை என கூறப்பட்டது. 

2024 ஆண்டு முதல் எவ்வித திட்டங்களாயினும் மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தின் அனுமதி மற்றும் ஆலோசனை பெறப்பட்டே செய்யப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது - என்றார்.