யாழ்.கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் வீட்டுக்குள்ளும் நுழைந்து வன்முறை...

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் வீட்டுக்குள்ளும் நுழைந்து வன்முறை...

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் புதன்கிழமை மாலை வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தனது நண்பனுடன் மோட்டார்சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற போது வெள்ளாம்போக்கட்டி சீலன் வீதி பகுதியில் வைத்து வழிமறித்த குழுவொன்று இளைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதுடன் - இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

மேற்படி குழுவின் தாக்குதலில் இருந்து தப்பித்து இளைஞன் அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்த நிலையில் வன்முறைக் கும்பல் அந்த வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கேமராக்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வெள்ளாம்போக்கட்டி பகுதியில் உள்ள இளைஞனுடைய வீட்டிற்கு சென்று வெளிக்கதவு, கண்ணாடிகள்,தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன்-வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றையும் திருடிக் கொண்டு மேற்படி கும்பல் தப்பித்துள்ளது.

இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காயப்பட்ட இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு