யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டும் அநாமதேய அமைப்பு! பின்னணியில் ஒரு விரிவுரையாளராம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னறிவித்தல் நேற்றிரவு கிளிநொச்சி வளாகத்தினுள் அடங்கும் சகல பீடங்களினது பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளையும், மறுநாள் 27 ஆம் திகதி அந்த அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் நினைவு தினத்தை கடைப்பிடித்தமையும் கிளிநொச்சி வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என சிங்கள மாணவர்கள் சிலர் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு அநாமதேயமாக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இத்தகைய அநமாதேய முறைப்பாடுகள் பல வெவ்வேறு பெயர்களில் அனுப்பப்பட்டதன் பின்னணியில் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை இயங்காத – பதிவு செய்யப்படாத கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் பீடாதிபதிகளுக்குக் கடிதம் ஒன்று நேற்றிரவு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்திலேயே மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களையும் அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படும் விவசாய பீடாதிபதியையும் உரிய விசாரணைகள் முடிவுறும் வரையும் உள்நுழைவுத் தடை விதித்து, இடைநிறுத்தி வைக்குமாறும்
இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் இத்தகையை நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருந்த பொறியியல் பீட பீடாதிபதி, தொழில்நுட்ப பீட பீடாதிபதி ஆகியோரையும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் மேலும் சில விடயங்களை முன்வைத்தும் எதிர்வரும் 7ஆம் திகதி ஏ – 9 வீதியை குறுக்கறுத்து - பாதையை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்தக் கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை 5ஆம் திகதிக்குள் நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களையும், விவசாய பீடாதிபதியையும் உள்நுழைவுத் தடை மூலம் இடைநிறுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் நாளை மறுதினம் 6ஆம் திகதிக்குள் தமக்குச் சாதகமான பதில் வழங்காதுவிடின் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்ற கட்டளையை ஒன்றைப் பெற்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு 7ஆம் திகதி திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அந்த அநாமதேய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் - அறிவியல் நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் பயங்கரவாத்த்தை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் தாம் கலந்துரையாடி இருப்பதாகவும்,
வழக்குகளில் முன்னிலையாகி தமக்குத் தேவையான சட்ட ஒத்துழைப்பை வழங்குவதற்குச் சட்டத்தரணிகள் சம்மதித்திருப்பதாகவும், கொழும்பு உட்பட இலங்கையின் ஏனைய நகரங்களில் இது தொடர்பில் கண்டண ஆர்ப்பாட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்,
மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களின் சம்மேளனத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.