வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரருக்கு இராஜகோபுர கும்பாபிஷேகம்
ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் இராஐகோபுர பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) பெருந்திரளான அடியவர்களின் அரோகராக் கோஷத்திற்கு மத்தியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை விசேட கிரியைகள்,தீபாராதனைகள என்பன இடம்பெற்று ஒன்பது நவகலச கும்பங்களும் தவில், நாதஸ்வர இசை முழங்கங்களுடன் உள்வீதியூடாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
சுபநேரமான முற்பகல்-10 மணியளவில் வேத பாராயணம் முழங்க, அடியவர்களின் அரோகராக் கோஷங்களுக்கு மத்தியில் இராஐகோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்களினால் பக்திபூர்வமாக இராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
இராஜஸ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இராஜகோபுரக் கும்பாபிஷேகக் கிரியைகளைச் சிறப்பாக நிகழ்த்தினர்.இராஜகோபுர கும்பாபிஷேகம் இடம்பெற்றதை தொடந்து திருக்கதவு திறக்கும் வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரப் பெருமான், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகிய தெய்வங்கள் அழகே உருவாக வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவ்வாலய இராஐகோபுர கும்பாபிஷேகத்தில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்த பெருந்திரளான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இவ்வாலய இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் கடந்த புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.