யாழ்.சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம், கைதான 4 பொலிஸாரும் விளக்கமறியலில், திங்கள் அடையாள அணிவகுப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம், கைதான 4 பொலிஸாரும் விளக்கமறியலில், திங்கள் அடையாள அணிவகுப்பு...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ்.நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சித்திரவதைக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோகதர் உட்பட நால்வரும்  கடந்த திங்கட்கிழமை முதல் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்தக் குழுவினரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நண்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். நால்வரையும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அதனை அடுத்து அவர்கள் அநுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு