பிரகாஷ்ராஜ் உட்பட 36 பேரை கொல்ல சதி.. கவுரி லங்கேஷ் கொலையாளிகளிடம் சிக்கிய பரபரப்பு டைரி
பெங்களூர்: கவுரி லங்கேஷை கொலை செய்த இந்துத்துவா தீவிரவாத கும்பல் மேலும் 36 பேரை கொலை செய்ய திட்டமிட்டது, புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருந்த ''பத்திரிக்கா" என்ற பத்திரிக்கை நிறுவனத்தை நடத்தி வந்தார் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இந்த கொலையில் பரசுராம் வாக்மோர் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார். விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஹிந்து ஜனதாகர்த்தி சமிதி என்ற அமைப்பு சொல்லித்தான் கொலை செய்ததாக கூறியுள்ளான்.
இந்த கொலை சம்பந்தமாக மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் 'கேல்' என்ற நபரிடம் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த டைரியில் மேலும் 36 பேரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இந்த 36 பேரும் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இந்த 36 பேரில் நடிகர் பிரகாஷ் ராஜும் ஒருவர்.
இதற்காக இந்து மத பாசம் கொண்ட 50 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே மத கலவரங்களை தூண்டிய 50 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பின் அந்த 50 பேருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக கர்நாடகாவின் நான்கு மாவட்டங்களில் ஆள் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கூறி அந்த 36 பேரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கொலை செய்ய போகும் நபர்களுக்கு கொலைக்கு முன் 3000 ரூபாயும், கொலைக்கு பின் 10 ஆயிரம் ரூபாயும் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். கவுரி லங்கேஷ் கொன்றவர்களுக்கும் இதே பணம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.