SuperTopAds

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் கடற்படை அதிரடி! 54 லட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் கடற்படை அதிரடி! 54 லட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மேற்கொள்ளப்பட்ட  விசேட ரோந்து நடவடிக்கையின் போது 54 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டிற்குள் போதைப் பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் நோக்கில் கடற்படையினர்  நாட்டைச் சுற்றியுள்ள கடலோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். எழுவைத்தீவுக்கு அண்மித்த கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 137 கிலோவுக்கும் அதிகமான  கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 03 நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

56 பொதிகளில் பொதி செய்யப்பட்டு 3 மூடைகளில் போடப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டிருந்தாகவும்   கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 54 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 44 வயதுடைய பூனேரி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  சந்தேகநபர்கள்  கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.