ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் தீ
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் ஏற்பட்ட தீ நள்ளிரவு 1 மணி அளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. பங்களாவை சுற்றி உள்ள சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா, திருப்போரூரை அடுத்த சிறுதாவூரில் உள்ளது.
இங்கு 10-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பங்களாவை சுற்றிலும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் உள்ளது. இதில் அதிக அளவு சவுக்கு மரங்கள், புற்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிறுதாவூர் பங்களா வளாகத்தில் இருந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென காய்ந்து கிடந்த இலைச்சருகளில் பரவி காட்டுத்தீயாக பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த சவுக்கு மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சிறுசேரி, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் ரசாயன கலவை கலந்த நீரை பீய்ச்சி அடித்தனர்.
ஏக்கர் கணக்கில் தீப்பற்றி எரிந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் அவர்களால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. சுமார் 6 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 1 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீப்பிடித்த இடத்துக்கும், பங்களா உள்ள இடத்துக்கும் சுமார் ½ கிலோ மீட்டர் இடைவெளி இருந்தது. எனவே மரங்களில் பற்றிய தீ பங்களாவில் பரவவில்லை. இதனால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
புதர்களில் தீப்பிடித்ததால் வெப்பம் தாங்காமல் அங்கு பதுங்கி இருந்த ஏராளமான பாம்புகள் படையெடுத்து வெளியே வந்தன. தீ விபத்து நடந்த இடத்தை வருவாய்த்துறை மற்றும் போலீசார் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. காய்ந்த புற்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுதாவூர் பங்களா வளாகத்தில் இதற்கு முன்பு 2 முறை இதேபோல் தீ விபத்து நடந்தது. அப்போது உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற் படவில்லை. தற்போது 3-வது முறையாக பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் பல லட்சம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் நாசமாகி உள்ளன.