SuperTopAds

யாழ்.கீரிமலை ஐனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்களை விடுவியுங்கள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலை ஐனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்களை விடுவியுங்கள்...

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் 33 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசித்து வரும் நிலையில்

தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டங்களையும் பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களை மீள் குடியேற்றாமல் அவர்களின் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுத்துள்ளனர்.

முதலீட்டாளர்கள் வடமாகாணத்தை நோக்கி வருவதனை வரவேற்கிறோம். அவர்கள் சட்ட ரீதியாக எமது மக்களை பாதிக்காத வகையில் அவர்களின் முதலீடுகள் அமைய வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள சுமார் 12 ஏக்கர் காணியை எடுத்துக்கொண்டு , அதற்குள் இருக்கும் தனியார் காணிகளுக்கான இழப்பீடுகளை தற்போதைய சந்தை பெறுமதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

அதேவேளை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள சுமார் 18 ஏக்கர் காணியையும் உடனடியாக காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் தொன்மையான ஆலயங்களான ஆதி சிவன் ஆலயம், விஷ்ணு ஆலயம், சடையம்மா மடம் உள்ளிட்ட மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை குறித்த ஜனாதிபதி மாளிகையை தங்குமிட விடுதிக்கு தருமாறு புலம்பெயர் தமிழர்கள் தமக்கு வழங்குமாறு கோரிய போதிலும், ஒரே ஒரு தமிழர் மட்டும் இருக்கும்,  அந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.

இந்த ஜனாதிபதி மாளிகை என்ன அடிப்படையில், வழங்கப்பட்டது என்பதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.