48 மாதங்கள் - 51 நாடுகள் - ரூ.355 கோடி செலவு; மோடி வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆர்.டி.ஐ!
மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடிதலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணித்து, உலகம் சுற்றும் தலைவராக மோடி பெயரெடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 4 ஆண்டுகள் ஆட்சியில் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த நபர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு பதில் கிடைத்துள்ளது.
அதன்படி, பிரதமர் மோடி 48 மாதங்களில் 41 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் 51 நாடுகளுக்கு பயணித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.355 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணமே, அதிகபட்ச செலவை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ரூ.31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் செலவாகியுள்ளது. இதேபோல் 2014ஆம் ஆண்டும் ஜூனில் பூட்டான் சென்ற பயணமே, மிகக்குறைந்த செலவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரூ.2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 செலவாகியுள்ளது.