வலி,வடக்கு - கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விரைவில் விடுவிக்கப்படும்...
யாழ்.வலிகாமம் வடக்கு கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விரைவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக நேற்று முன்தினம் (22) ஆம் திகதி ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கும் அனுமதித்ததுடன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆலயம் உட்பட அப்பகுதி காணி விடுவிப்பு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பட்டிருந்தது. இந்நிலையில் காசி அம்மன் கோயில் அதனுடன் உட்பட்ட காணிகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாகியதுடன் தற்போது 33 வருடங்களுக்கு பின்னர் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்க்க அனுமதி வழங்கியிருந்தனர்.
அங்குள்ள இராணுவத்தினர் யுத்தத்தினால் சேதமடைந்துள்ள இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் பிள்ளையார் சந்நிதானத்தில் அங்கிருந்த பிள்ளையார், வைரவர், அம்மன், விக்கிரகங்களை வைத்து இராணுவத்தினர் வழிபட்டு வருகின்றனர்.