SuperTopAds

தமிழக அரசு மீது சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பரபரப்பு புகார்

ஆசிரியர் - Editor II
தமிழக அரசு மீது சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பரபரப்பு புகார்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. மேலும், கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

அதற்கு அரசு தரப்பில், கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு சிறப்புக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை அரசு தமக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் பணியிட மாற்றம் செய்வதாகவும், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். 

இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை  நீதிமன்ற அனுமதியின்றி பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.