SuperTopAds

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய முகமூடி கொள்ளை கும்பல் சிக்கியது! பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய முகமூடி கொள்ளை கும்பல் சிக்கியது! பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு..

யாழ்.மாவட்டத்தில் இரவில்  கத்தி காட்டி மிரட்டி நகைகொள்ளை அடித்த கும்பல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில்  வீடுகளுக்குள் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தி காட்டி  நகை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்த நிலையில்

குறித்த விடயம் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட  முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ,மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நல்லூர் பின் வீதியைச்சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி பகுதியில் நேற்று அதிகாலை அரச உத்தியோகத்தரின் வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டியமை, கல்வியக்காட்டு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி மிரட்டி பணம் கொள்ளை அடித்தமை மற்றும் பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி நகை கொள்ளை அடிக்க முயன்றமை. 

இணுவில் பகுதியில் வயோதிபர்கள் இருந்த வீட்டுக்குள்புகுந்து கத்தி காட்டி நகை கொள்ளை அடித்தமை போன்ற போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சங்கிலியன் வீதி பகுதியில்  கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு இணுவில்  பகுதியில் திருடப்பட்ட நான்கு பவுண் நகையும் திருட்டுக்கு  பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள், நான்கு கையடக்க தொலைபேசிகளும் பொலிசாரால்  மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட  விசாரணையின்போது  நல்லூர் பின்  வீதியால் செல்லும் வயது முதிர்ந்தவர்களை மிரட்டி  கைத்தொலைபேசி, சிறிய தொகை பணம்  திருடும் சம்பவத்திலும் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் ஆலோசனைக்கமைய யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் விஷாந்தவிற்கு கீழ் இயங்கும் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோல் அவர்களால்  வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய யாழ்மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன்,

மற்றும் உப பொலிஸ்பரிசோதகர் பிரதீப் அவர்களின் கீழ்  கவியரசன் ஜெயந்தன், கரன், சுஜந்தன், ஜோசப், சம்பத் அறுகம், பெண் கொஸ்டபிள் இரந்திகா ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த கைது சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.