பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் தீட்டிய கௌரி லங்கேஷ் கொலையாளிகள்
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி கர்நாடகாவின் பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கௌரி லங்கேஷ் கொலை விவகாரம் தொடர்பாக சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை தொடங்கியது. அப்போது நவீன் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரை வைத்து மற்ற கொலையாளிகளை பிடிக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அமோல் காலே, அமித் தெக்வெக்கர், பரசுராம் வாக்மாரே போன்றோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. வலது சாரி சிந்தனைகளுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்ததால் அவரையும் தீர்த்துக்கட்ட இவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.
அதேபோல, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் புகழ்பெற்ற நடிகரான கிரிஷ் கர்நாடை கொலை செய்யவும் இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. அந்த கொலைக்கு “ஆப்ரேஷன் காகா” என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ”கருத்து வேறுபாடிருந்தால் அதற்கு கொலை தான் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தை அரசியலாக்க முயல்பவர்கள் மீதுதான் எனது விமர்சனம்”.
”என் குற்றச்சாட்டுகள் சரி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் நான் இன்னும் அதிகமாக போராடுவேன். இன்னும் தீவிரமாக எனது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இதுவரை பிரவீன், அமோல் காலே, அமித் தெக்வெக்கர், மனோகர் துண்டப்பா யாதவே, பரசுராம் போன்றோரை சிறப்பு காவல் படை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.