யாழ்.மார்ட்டின் வீதி கொலை வழக்கில் மரண தண்டணை வீதிக்கப்பட்டவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மார்ட்டின் வீதி கொலை வழக்கில் மரண தண்டணை வீதிக்கப்பட்டவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை..

யாழ்.மாட்டீன் வீதி கொலை வழக்கில் எதிரிக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு எதிரி விடுவிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு மேன்முறையீட்டு தீதிமன்ற நீதியரசர்கள் மேனகா விஜயசுந்தர, சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியை சேர்ந்த 85 வயதுடைய தேவராசா லில்லி மேரி என்பவரை, 2008ம் ஆண்டு மார்கழி மாதம் 29ம் திகதி கொலை செய்ததாக, 

இறந்தவரின் வீட்டில் வசித்து வந்த குணபாலசிங்கம் ஜெறோம் என்பவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கப்பட்டது.

தனது வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயிருந்த குறித்த மூதாட்டியின் சடலம், 2 மாதங்களின் பின்னர், அவரின் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. 

எதிரியின் மனைவி பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அப்போதைய யாழ்ப்பாண நீதிவான் ஆர்.வசந்தசேனன் முன்நிலையில் பொலீஸாரால் புதைகுழியில் இருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதணை  மேற்கொள்ளப்பட்டது. 

சட்ட வைத்திய அதிகாரி கே.ரத்தினசிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் 

மற்றும் மொட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதனால் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு என்பன காரணமாக மரணம் உடனடியாகவே நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டது. 

இறந்தவர் காணாமல் போயிருந்த காலப்பகுதியில் அவர் வாழ்ந்த அதே வீட்டில் தனது மனைவி, பிள்ளையுடன் வாழ்ந்து வந்த எதிரி பொலீஸாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டு நகைக்கடைகளில் இருந்து உருக்கப்பட்ட நிலையில் சில நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.  

யாழ்.மேல் நீதிமன்றில் நடாத்தப்பட்ட வழக்கு விசாரணையில் அரச தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியத்தை தொடர்ந்து, எதிரியும் சாட்சியம் அளித்தார்;. 

இறந்தவர் காணாமல் போவதற்கு முன்னரே தனது மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் இறந்தவர் வசித்த வீட்டிலிருந்து தான் தனியே வெளியேறிச் சென்றுவிட்டதாகவும், 

தொடர்ந்து பொய்யான தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  மூன்று வாரங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். 

இறந்தவரின் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் பிள்ளையை தேடி தான் சென்ற போது, அங்கு யாரும் இருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். 

இறந்தவரின் கொலைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வழக்கில் தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது தனது மனைவி இறந்துவிட்டார் என்று அறிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.        

வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளச்செழியன், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால், 

திருப்திகரமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, குற்றத்தீர்ப்பு வழங்கி  எதிரிக்கு மரணதண்டனை விதித்திருந்தார். 

2017ம் ஆண்டு ஆனி மாதம் 27ம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பையும் மரணதண்டனையையும் ஆட்சேபித்து எதிரியினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி என தீர்ப்பளிப்பதற்கு போதுமான சாட்சியம் இல்லை என அவரின் சார்பில் வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

நீதியரசர்கள் மேனகா விஜயசுந்தர, சசி மகேந்திரன் ஆகியோர் தமது தீர்ப்பில், குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து எதிரியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். 

மேன்முறையீட்டு விசாரணையில் எதிரியின் சார்பில் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி எஸ்.பஞ்சாட்சரத்தின் அனுசரணையுடன் ஆஜரானார்.

பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி சமிந்த விக்கிரமரத்ன வாதாடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு