ஆகஸ்ட் 19ம் திகதி முதல் செப்டம்பர் 16ம் திகதிவரை நல்லூர் சுற்றுவீதி மூடப்பட்டிருக்கும்..
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,
இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை யாழ்.மாநகரசபையில் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, ஓகஸ்ட் 19 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.
ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி
மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.
அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.
அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும் வாகனங்கள் அனைத்தும் செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்.நகரை அடைய முடியும்.
ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதுடன் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது. வாகனத் தரிப்பிட கட்டணங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் யாழ்.மாநகர சபை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.