யாழ்.கீரிமலை தீர்த்த கேணி ஆக்கிரமிப்பு! ஐனாதிபதியிடம் இந்து மாமன்றம் விடுத்துள்ள கோரிக்கை...
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை தீர்த்த கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில்,
ஒவ்வொரு சைவ ஆதாரங்களையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்கள் வெளிநாடுகள் வரை சென்று எதிரொலிக்கும்போது தமது செயற்பாடுகளிலிருந்து திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் என்று சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் கவலைக்குரியது.
இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். இப்படியான சமிக்ஞைகளால் அரசாங்கம் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அதன் முயற்சிகளில் பாரியளவில் பாதிப்பு ஏற்படும்.
கீரிமலை கேணி, தமது நீத்த உறவினர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வெளிநாடுகளிலிருந்தும் சைவமக்கள் வந்து செல்கின்ற இடம்.
ஈழத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கேணி பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. இது ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வலி.வடக்கு பிரதேச சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிற இடம்.
சைவத் தமிழ் மன்னன் இராவணனோடும் இராமாயணத்தோடும் தொடர்புடைய திருக்கோணேஸ்வர ஆலய சுற்றாடலில் வெளியார் ஆக்கிரமிப்பு, கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடு,
அண்மையில் பறளாய் முருகன் கோவிலில் உள்ள ஒரு அரச மரத்தைப் பற்றிய சர்ச்சை, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை, பின்னர் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்ச்சைகள் என சைவ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கின்றன.
எனவே, இத்தகைய அநீதியான செயலைத் தடுத்து நிறுத்துவதோடு, சிறுபான்மை மக்களின் மத வழிபாடுகளை தடுக்கின்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எமது மத வழிபாட்டை தடை செய்ய எவருக்கும் உரிமையில்லை. அத்தகைய செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றோம் என்கின்றனர்.