சாரதி தூக்கம்! மரம் மீது மோதிய கார், வைத்தியசாலைக்கு செல்ல காத்திருந்த பெண் பலி..
கார் சாரதி தூங்கியதால் கார் மரம் மீது மோதி மரம் முறிந்து விழுந்ததில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண்ணே இவ்வாறு நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.
இதன்போது வவுனியாவில் இருந்து வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி, அதன்பின்னர் அருகில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தின் போது முறிந்த மரமானது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பெண்மணியின் மீது விழுந்தது.
இந்நிலையில் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீசாலை கிழக்கு, மீசாலை பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் நவரஞ்சிதம் (வயது 56) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.