வெப்பம் உச்சம்! குழந்தைகள் / சிறுவர்களுக்கு அதிகம் நீரை பருக கொடுங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் அருள்மொழி..
வடமாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே.அருள்மொழி தெரிவித்தார்.
வடமாகாணத்தில் தற்போது வெப்பநிலை வழமையை விட அதிகரித்துள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக் காலப் பகுதியில் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படுபதுடன் உடலில் பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இவ்வாறு பருக்கள் ஏற்படும்போது உடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் பெற்றோர்கள் சிறுவர்கள் குழந்தைகளின் உடல் சுத்தத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும். ஆகவே வெப்பமான காலநிலையை எதிர்கொள்வதற்கு அதிகம் நீர் பருகுவதுடன் கிருமி நாசினிகள் பாவிக்காத பழவகைகளை உண்ணுவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.