SuperTopAds

`30 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்டதா?’ - ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் பின்னணி

ஆசிரியர் - Editor II
`30 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்டதா?’ - ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் பின்னணி

ராமேஸ்வரம் அருகே, போராளிகள் புதைத்துவைத்திருந்த வெடிமருந்துப் பொருள்கள், பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தையாவுக்குச் சொந்தமான பண்ணை வீடு, அந்தோணியார்புரத்தில் உள்ளது. அந்தையா இறந்துவிட்டதால், அவரது மகன் எடிசன் என்பவர் தற்போது இந்த வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது, துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

அவர்கள், இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது,  இயந்திரத் துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடிபொருள்கள், நிலக் கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன்கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மதுரையில் இருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்புக் குழுவினர், வெடிப்பொருள்கள் சிக்கிய பகுதிகளில் இன்று நவீன கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து,  கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வுசெய்தனர். சிக்கிய வெடிபொருள்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை என்பது அப்போது தெரிய வந்தது. பெரிய கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றைத் தகர்க்கும் சக்திகொண்டவை என்றும், ஆனால் இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனவும் ஆய்வில் தெரியவந்தது. மேலும், தரையில் விழுந்தவுடன் வெடிக்கும் தன்மைகொண்ட ஏவுகணை வெடிமருந்துக் குப்பிகள் மட்டும் தனியாகப் பிரித்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் இவை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும், நீதிபதி ஆய்வுக்குப் பின், அவரது உத்தரவுக்குப் பின், இவற்றை பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டுசென்று அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.