SuperTopAds

யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களுக்கு மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் விசேட அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளார். 

இது குறித்து மாவட்டச் செயலர் விடுத்துள்ள   ஊடக அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், 

சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், சுற்றுலாதுறை அமைப்பின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், பிரதேசசபை, நகரசபை செயலாளர்கள், 

உணவுச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள் , மாவட்ட உதவிச் செயலாளர் , பிரதேசசெயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடனும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் 1980 ஆம் ஆண்டில் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் உணவு விற்பனை நிலையங்களில் காணப்படும் சுகாதாரம், உணவின் தரம், அளவு, 

உணவு விற்பனை நிலையங்களில் உணவை கையாளுபவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் உணவுச்சாலைகளுக்கான பதிவு, தரப்படுத்தல், குறித்த சட்டத்திற்கு கீழான ஒழுங்கு விதிகளும் தண்டனைகளும் போன்ற பல்வேறு விடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டன.

மேலும், இக்கலந்துரையாடலில் வெதுப்பக உற்பத்திகளின் நிறை, நிர்ணயிக்கப்படும் விலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நடமாடும் வெறுப்பக விற்பனை நிலையங்களில் உள்ள சுகாதார குறைபாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

பெரும்பாலான யாழ்ப்பாண நகர உணவுச்சாலைகள் உரிய தரங்களை கொண்டிருக்கவில்லை என்பதுடன், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதியளவு காய்கறி உற்பத்தி செய்யப்படுவதுடன் அவை வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் இங்குள்ள உணவு நிலையங்களில் இத்தகைய மரக்கறி வகைகளை பயன்படுத்தப்படாமலும் சோயாமீற், 

கடலை, பூசணி போன்றவற்றையே கறிகளாக பயன்படுத்துவதாகவும் நுகர்வோர் மத்தியில் அதிருப்தியான நிலை காணப்படுவதாகவும் அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் உணவுச்சாலைகளில் கடமையாற்றுவர்களுடைய பொதுமக்கள் தொடர்பாடல், உடை அமைப்பு, உணவுச் சாலைகளுக்கான இட வசதி போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களால் விவாதிக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் நல்லூர் கந்தசாமி ஆலயம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் போன்ற பிரபலமான ஆலயங்களின் உற்சவம் ஆரம்பிக்கப்படும் நிலையில் வெளிநாட்டில் வசிப்போர் பெருமளவில் இங்கு வர இருக்கின்றனர். 

மேற்படி உணவுச் சாலைகள், விடுதிகள், வெதுப்பகங்கள் பொது மக்களின் நன்மை கருதி உரிய தரங்களை பேணுவதுடன் சுகாதாரத் துறையினரால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொண்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை தங்கள் ஸ்தாபனங்களுக்கு சேவைக்கு அமர்த்துதல் வேண்டுமென உணவுச் சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் அளவு, நிறை என்பவற்றுக்கமைய விலைகள் தீர்மானிக்கப்பட்டு காட்சிப்படுத்தல் வேண்டும்.

இதற்காக உணவுச்சாலை உரிமையாளர்கள் தமக்குள் ஓர் அமைப்பினை உருவாக்கி மேற்படி அளவு, நிறை என்பவற்றுக்கேற்ப பொதுவான விலையினை தீர்மானத்து எதிர்வரும் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னதாக அதனை மாவட்ட செயலகத்திற்கு அவ்விபரத்தினை பொதுமக்களுக்கு வகையில் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த மாவட்ட அறியத்தருவதுடன் தெரியப்படுத்தும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வெதுப்பக உற்பத்திகளுக்குரிய விலைகளும் உற்பத்தியின் அளவு, நிறை என்பவற்றிற்கேற்ப வெதுப்பக உரிமையாளர் சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்படுவதோடு விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது தொடர்பான விபரங்கள் ஆவணி 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல நகரங்களிலும் குறிப்பிடத்தக்க உணவுச்சாலைகள் உற்பத்தி மற்றும் சேவை வழங்கயில் உயர்தரத்தை பேணி அவற்றுக்குரிய சான்றிதழை சுகாதாரப் பிரிவினரிடம் பெற்றுக் கொண்ட போதிலும், 

பெரும்பாலான கடைகள் புதிய தரத்துக்கு அமைவாக வேண்டியதை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண வணிகர் அணுசரனையுடன் பிரதேச செயலக ரீதியாக சிறந்த தரத்தை பேணும் உணவுச் சாலைகளை கௌரவித்து சிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வுகளும் தீர்மானிக்கப்பட்டது  என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.