"வந்தேறி மாடுகள்" அடையாளம் காணப்படவேண்டும்: எச். ராஜா வன்முறை ட்வீட்!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எடிசன் என்பவரது வீட்டில், குவியல், குவியலாக தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது குறித்து, மத வன்முறையைத் தூண்டும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடம் பகுதியிலுள்ள அந்தோணியார்புரம் கடற்கரை அருகே மீனவர் எடிசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக நேற்று குழி தோண்டியுள்ளனர். அப்போது சிதைந்த நிலையில் குவியல் குவியலாக இரும்பு பெட்டிகள் கிடைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எடிசன், இதுகுறித்து தங்கச்சிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் பெட்டிகளை திறந்து பார்த்தனர். அவற்றில் ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகள் போன்றவை இருந்தன. கைப்பற்றப்பட்ட அனைத்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வன்முறையத் தூண்டும் விதமாக தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”இராமேஸ்வரத்தில் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவர் வீட்டில் தோண்டத் தோண்ட நவீன ஆயுதங்கள். தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். உளவுத்துறைக்கு சவால்”. இவ்வாறு அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.