யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகளை பார்க்க வருவோரிடம் சோதனை! சாராய போத்தல்கள், போதைப் பாக்குகள் மீட்பு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி..
யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிடவந்தவர்களின் பைகள், கைப்பைகள் நேற்று திடீர்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மருத்துவமனைக்குள் போதை பொருட்கள் பாவனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மருத்துவமனைக்குள் நுழையும் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பார்வையிடவருவோர் என அனைவரினதும்,
பொதிகள், கைபைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் சோதனையிடப்பட்டது. இதன்போது 3 சாராயப் போத்தல்கள், போதைப்பாக்கு, வெற்றிலைக்கூறு என்பன நீக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளர்களை பராமரிப்பவர்கள் சிலரும் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர்களின் செயற்பாடுகள் குறித்து எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன,
இதுகுறித்து பொலிஸாருடனும் கலந்துரையாடி வருகிறேன் நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு சகலரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் போதைப்பொருள் உள் நுழைவதை தடுப்பதற்கு என்றார்.