தொழிலாளர்களை சுரண்டும் புதிய சட்டங்களை உருவாக்க அரசு முஸ்தீபு - சட்டத்தரணி சுவஸ்திகா
இலங்கையில் தொழிலாளர்களை சுரண்டுவதற்காக புதிய சட்டங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில் ஆபத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர், சட்டத்தரணி சுவஸ்திகா அருணிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தொழிலாளர் உரிமை மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் தொழிலாளர்கள் உரிமையை பறிப்பதற்கும் அவர்களை முதலாக வர்க்கம் சுரண்டுவதற்குமான புதிய தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்படவுள்ளது.
குறித்த சட்டத்தில் தொழிலாளர்களின் 8 மணித்தியால வேலை நேரம் இனிமேல் முதலாளி வர்க்கத்தினால் வரையறை செய்யப்படவுள்ள நிலையில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அவர்கள் விரும்பியவாறு வழங்கலாம் அல்லது வழங்காமல் விடலாம் என்ற போர்வையில் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாது ஒருவர் திடீரென தான் செய்த தொழிலில் இருந்து நீக்கப்படுவாரானால் தனது தொழில் நீக்கம் தொடர்பில் தொழில் வழங்குனருக்கு எதிராக தொழில் நியாய சபையில் முறையிடவோ கேள்வி கேட்கவோ முடியாது.
வேலையால் ஒருவரை தனது வேலை தளத்திலிருந்து வேலை வழங்குனர் நீக்குவாராயின் புதிய சட்டத்தில் தொழில் வழங்குநருக்கு எதிராக தொழில் நியாஜ சபையில் பாதிக்கப்பட்டவர் முறையிட முடியாது.
குறிப்பாக பெண்களை எடுத்துக் கொண்டால் பெண்களை இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தி வேலைத்தளத்தில் வேலைகளில் ஈடுபடுத்த முடியாது.
ஆண் பெண் சமத்துவம் என கோருபவர்கள் பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்தும் போது பெண் மேற்பார்வையாளர் ஒருவரின் கண்காணிப்பில் அவருக்குரிய ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும்.
ஏற்கனவே இலங்கையில் வேலையில்லா வீதம் அதிகரித்துள்ள நிலையில் புதிய தொழில் சட்டத்தினால் மேலும் வேலையில்லாப் பிரச்சனை அதிகரிக வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளது.
ஆகவே குறித்த புதிய தொழில் சட்டம் உருவாக்கும் முயற்சிகளை தோற்கடிப்பதற்கு வடக்கு தெற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்த முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.