யாழ்.மாவட்டத்தில் 15ம் திகதிக்கு முன் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்! மீறினால் 20ம் திகதி முதல் சட்ட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 15ம் திகதிக்கு முன் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்! மீறினால் 20ம் திகதி முதல் சட்ட நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்திலுள்ள முச்சக்கர வண்டிகளிற்கு மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை  ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் யாழிலுள்ள முச்சக்கர வண்டிகளிற்கு மீற்றர் பொருத்துவதுடன், அவற்றின் ஒழுங்கமைப்புக்களை சரியாக மேற்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இவ்வாறான, கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இரண்டு மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ள போதிலும், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க கூடியதாக இருந்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மீற்றர் பொருத்தப்பட வேண்டிய அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றரை பொருத்தி 20,21,22 ஆகிய திகதிகளில் பொலிஸாரால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

அது ஒட்டபட்ட பின்னரே செப்டெம்பர் மாதத்தில் இங்குள்ள தரிப்பு நிலையங்களில் நின்று முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

மீற்றர் பொறுத்தப்படாது மற்றும் பொலிஸ் ஸ்டிக்கர் இல்லாதும் ஓடப்படும் முச்சக்கர வண்டிகள் மீது பொலிஸாரின் கவனத்தை கொண்டு வருவதுடன் அதன் பின்னர் சட்ட நடவடிக்கையும் எடுத்தல் என்ற தீர்மானத்தை எட்டியுள்ளோம்.

ஆகவே, இது குறித்து நாளைய தினம் முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டிகள் தரிப்பிடங்களுக்கு சென்று இது தொடர்பாக ஆலோசனை வழங்கவுள்ளோம்.

அதனையடுத்து, 20 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் செயற்பாடு அமுலுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு