SuperTopAds

யாழில் - மாட்டு கள்ளர்களுக்கும்/ மணல் கள்ளர்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு! உண்மையை உடைத்த கிராமசேவகர்கள்....

ஆசிரியர் - Editor I
யாழில் - மாட்டு கள்ளர்களுக்கும்/ மணல் கள்ளர்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு! உண்மையை உடைத்த கிராமசேவகர்கள்....

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விவரங்களை பொலிசாருக்கு வழங்கும்போது கிராமசேவகரையே  பொலிஸார் கட்டிக் கொடுப்பதாக கிராமசேவகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட கிராம அலுவலர்களுக்கும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே கிராமசேவகர்கள் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், 

கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்குகின்றனர்.

வழங்கும்போது  தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்டவிரோதா செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் சில மணித்தியாலங்களுக்குள்  பொலிசார் ஊடாக அறிந்து கொள்கிறார்கள்.

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் தொடர்கிறது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விவரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்குகிறோம்.

தகவலை வழங்கிய பின்னர் சில மணித்தியாலங்களில் எந்த கிராமசேவையாளர் தகவல் கொடுத்தார் என்ற விவரம் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையோரின் காதுகளுக்கு செல்கிறது.

இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராமசேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் நிலை உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் எனக்கு விவரங்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.