SuperTopAds

யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபடும் இராணுவத்தில் பணியாற்றிய நபர்!!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபடும் இராணுவத்தில் பணியாற்றிய நபர்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதனால் பொலிஸார் கண்டுகொள்வதில்லை. எனவும் தெரிவித்துள்ளார். 

மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றவேளை சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அதனை பொலிஸார் கண்டுகொள்வதில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் யாட் அமைத்து சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும், குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் இதனால் மக்கள் அவர் குறித்த தகவல்களை வழங்க அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை சட்டவிரோதமான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு மருதங்கேணி, நாகர்கோவில், வல்லிபுரம், முள்ளிச்சந்தி ஆகிய நான்கு இடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ காவலரண்கள் இருக்கின்ற நிலையில் இது எவ்வாறு இடம் பெறுகிறது என கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை மணல்காட்டில் இருக்கக்கூடிய சவுக்கம் காட்டை சமூக காடாக மாற்றி தருமாறு மணல்காடு மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

தற்போது மணல்காடு பகுதியில் சவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பொலிஸார் தவறுவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 

அதனை சமூக காடாக மாற்றி பிரதேச செயலரின் மேற்பார்வையில் மணல்காடு கிராம மக்களுடைய பயன்பாட்டில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.