கேரளாவில் ரசாயனம் கலந்து விற்பனைக்கு அனுப்பப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல்..!!
கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.