யாழ்.மாவட்டத்தில் வன்முறைகள்/ சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இராணுவத்தில் ஒத்துழைப்பு தேவை..
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கோஷ்டி மோதல்கள்/ போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே ராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ராணுவத்தினர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.
குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரால் 700ற்கும் மேற்பட்ட வீடுகள் ராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ள அதேபோல் எதிர்வரும் காலத்திலும்
மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தான் கோரியதாகவும் தெரிவித்தார்.