எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்குகின்றனர்: முதல்வர்
வளர்ச்சித் திட்டங்களை தமிழக ஆளுநர் பார்வையிடுவதைத் தடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 4 மாநில பிரதிநிதிகளை அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை நியமித்தன. ஆனால் கர்நாடகம் மட்டும் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. இதனால் மத்திய அரசு தலையிட்டு கர்நாடக பிரதிநிதிகளை நியமித்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு முறை ஆணையம் கூடி உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பசுமைவழிச் சாலை விவகாரத்தில் சேலத்தில் 36 கிலோ மீட்டர் தொலைவிற்கு 30 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லைக்கல் நடப்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கு நான்கைந்து பேர் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையானோர் தானாக முன்வந்து அரசின் திட்டத்திற்காக இடத்தை வழங்குகின்றனர். மேலும் வாகன எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் சாலை அமைக்கப்பட வேண்டியது மாநில அரசின் கடமை. இதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இழப்பீட்டை விட தற்போது எடுக்கப்படும் வீடுகளுக்கு தேய்மானத்தை தவிர்த்து அரசு அதிகமாகவே இழப்பீடு வழங்குகிறது என தெரிவித்தார்.
மேலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்வது கிடையாது. சட்டத்திற்கு புறம்பாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடத்தியதால் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என விளக்கம் அளித்தார்.
வளர்ச்சித் திட்டங்களை உருவாகுவதற்கு ஆளுனர் பார்வையிடுவது தவறல்ல என்றும், அவர் வருகையை யாரும் தடுக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விமான நிலைய விரிவாக்கம் மூலம் சேலத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரும். இதன் மூலம் சேலம் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார்.