SuperTopAds

காவிரி ஆணையத்துக்கு எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கர்நாடகா முடிவு?

ஆசிரியர் - Editor II
காவிரி ஆணையத்துக்கு எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கர்நாடகா முடிவு?

மத்திய அரசு அமைத்த காவிரி ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அம்மாநில முதல்வர் இன்று சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார். காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஆணைய உறுப்பினர்களை நியிமித்து அறிவித்த போதிலும் கர்நாடகா இதுவரை தங்கள் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இதனால் கர்நாடகா சார்பில் மத்திய அரசே தற்காலிக உறுப்பினரை நியமித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு நிருபர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறுகையில்,  ‘‘கர்நாடக மாநிலத்தின் நலனை பாதிக்கும் காவிரி ஆணையத்தின் அம்சங்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவோம்’’ என்றார். இந்நிலையில் கர்நாடக பிரதிநிதிகளை மத்திய அரசே நியமித்தது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேற்று மாலை சந்தித்து குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அரசின் தலைமை வக்கீல் உதய்ஹொள்ளா, நீர்ப்பாசன துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். 

இன்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தலைமை வழக்கறிஞர் உதயஒல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். மத்திய அரசு தன்னிச்சையாக காவிரி ஆணையத்தை அமைத்ததை எதிர்த்து நாளை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

குமாரசாமி-எடியூரப்பா மோதல்: கர்நாடக மாநில பாஜ தலைவர் எடியூரப்பா நேற்று மாலை அளித்த பேட்டியில், காவிரி விவகாரம் குறித்து முதல்வர் குமாரசாமி உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். பின்னர் நீதிமன்றத்தை நாட ேவண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த குமாரசாமி, மத்தியில் உங்கள் கட்சி (பாஜ) ஆட்சி தான் உள்ளது. ஏன் அவசரமாக ஆணையத்தை அமைத்தீர்கள் என்று பிரதமர் மோடியிடம் சென்று எடியூரப்பா கேட்க வேண்டும் என்று காட்டமாக கூறினார்.