இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் உத்தியோக பூர்வமாக பதவியேற்பு
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் புதிய தலைமைக் காரியாலய அலுவலகமும் திறப்பு
இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் உத்தியோக பூர்வமாக தனது பணிகளை ஏற்றுக்கொண்டார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள புதிய தலைமைக் காரியாலய அலுவலக கட்டடப்பகுதியை திறந்து வைத்த பின்னர் இங்கு பேரவையின் தேசிய பணிப்பாளர் உத்தியோக பூர்வமாக தனது பணிகளை ஏற்றுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை(3) மாலை மத அனுஸ்டானங்களுடன் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம் முஸாரப் பேரவையின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத்
நாட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சமாதான மனித உரிமைகளை பேணும் நடவடிக்கையில் பணிகளை மேற்கொண்டு வந்த சமாதான நீதவான்கள் பேரவை புதிய முனைப்புகளோடுதொடர்ந்தும் இயங்குவதற்கான ஆரம்பித்திருக்கின்றது. நாட்டில் உள்ள நீதிவான்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
'சுபீட்சமான இலங்கை' எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமாதான நீதிவான் என்பது கௌரவத்துக்கும் மரியாதைக்கும் உருத்தான ஒரு பதவியாகும். சமாதானம் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் இக்காலகட்டத்தில் சமாதானம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் நமது சமாதான நீதவான் பதவியின் செயற்பாடுகள் பற்றி சற்று அறிந்து கொள்வதும் அவசியமாகின்றது.
சமூகத்திலுள்ள கௌரவமான சிறப்புமிக்க பிரஜைகளுக்கு அவர்களது அறிவு,ஆற்றல், இயலுமை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் கௌரவமான சேவையொன்றை மேற்கொள்வதற்காகவே இவ்வாறான சமாதான நீதவான் பதவி வழங்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பதவி அன்று பிரித்தானிய முடிக்குரிய ஆட்சியாளரால் 1804ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதியே முதன்முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வரலாறுகளில் காணக் கூடியதாக உள்ளது.எனவே சமாதன நீதவான்களின் பொறுப்பும் கடமைகளும்இ சமாதான நீதவான்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இங்கு வலியுறுத்தி கூறினார்.
இலங்கை சமாதான நீதவான்கள் பேரவை கடந்த காலங்களில் நாட்டின் பல பாகங்களில் சமாதானத்தை வலியுறுத்தி பல்வேறு பிணக்குகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.