SuperTopAds

நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்தில் ஹெரோயின் திருடி பொலிஸ் கான்ஸ்டபிள் ஊடாக நடந்த போதைப்பொருள் வியாபாரம்..!

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்தில் ஹெரோயின் திருடி பொலிஸ் கான்ஸ்டபிள் ஊடாக நடந்த போதைப்பொருள் வியாபாரம்..!

நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்தில் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் சான்றுப் பொருட்கள் காப்பகத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்த்தரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் காப்பகத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 21 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து 48 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். 

அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, அந்த ஹெரோயின், கொத்தட்டுவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக தனக்கு கிடைத்ததாக சந்தேக நபர் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக, சந்தேக நபரைக் கொண்டே பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு அழைப்பெடுத்து, கொத்தட்டுவ பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றுக்கு பொலிஸ் கான்ஸ்ட்பிளை வரவழைத்து போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

அப்போது அவரிடம் இருந்து 750 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிலிடம் முன்னெடுத்த விசாரணைகளில், அவருக்கு குறித்த போதைப் பொருள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் காப்பக பொறுப்பாளர் ஊடாக கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவரைக் கைது செய்ய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையிலேயே அது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.