101 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களுடன் இந்திய கடற்படை கப்பல் வருகிறது..!
இந்திய அரசாங்கத்திடமிருந்து சுமார் 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
இது இந்திய கடற்படையின் காரியல் என்ற கப்பல் ஊடாக இவை நாட்டை வந்தடையவுள்ளன.இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்திடம் இருந்து 340 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள்
ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடியால் பல்வேறுபட்ட மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் சத்திர சிகிச்சைகள் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையிலேயே இலங்கைக்கு அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு சர்வதேசம் முன்வந்துள்ளது. அதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்தினால்
1.37 மில்லியன் பெறுமதியான மருத்துவ உதவிகள் அடுத்த மாதமளவில் கிடைக்கப் பெறவுள்ளது. மேலும் தாய்லாந்திடமிருந்து 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளும் கிடைக்கப்பெறவுள்ளன.
இவை தவிர பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கடந்த வாரம் அறிவித்துள்ளது.
மேலும் வாஷிங்டன் சென்றுள்ள நிதி அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பிற்கமைய மருந்து கொள்வனவிற்காக 21.7 மில்லியன் டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.