பொதுமக்கள் மீது மிலேச்சைதனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம், 3 நாட்களில் விசாரணை அறிக்கைக்கு உத்தரவு..!
கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் பொலிஸார் - பொதுமக்கள் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த
மேற்படி அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.