SuperTopAds

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 250 வரையான உளவாளிகள்! பொலிஸ் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி...

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிரான போராட்டத்தில் 250 வரையான உளவாளிகள்! பொலிஸ் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி...

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்குள் சுமார் 250 வரையிலான அரச உளவாளிகள் இருப்பதாக பொலிஸ் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயரதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வாறு அதிகப்படியன உளவாளிகள் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இருந்து தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகின்றது. அரச உளவுச் சேவை, பொலிஸ் விஷேட நடவடிக்கை பிரிவு, 

மேல் மாகாண உளவுப் பிரிவு மற்றும் நுகேகொட உளவு நடவடிக்கை பிரிவின் உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் தகவல் சேகரிக்கும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் மட்டும் அவதானம் செலுத்தும் நுகேகொட உளவு விஷேட நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தில் தகவல் சேகரித்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தை பெரும் திரளான மக்கள் தொடர்ச்சியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு கலகத் தடுப்பு பொலிஸாருடன், கொழும்பு மத்திய பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக 

கல்கிசை, களனி நுகேகொடை, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நீர்கொழும்பு, களுத்துறை, பாணந்துறை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, மோசடி தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் விஷேட கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப் போவதாக கூறும் ஆர்ப்பாட்டக் காரர்கள், ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கும் தேனீர், 

பிஸ்கட்டுக்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அமைதியாக தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.