நோயாளியை பார்வையிடப்போவதாக கூறி வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளி மீது கத்திக்குத்து தாக்குதல்...!
வைத்தியசாலைக்குள் நோயாளியை பார்வையிடுவதுபோல் நுழைந்து நோயாளி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மருதானை-ஆனந்தா மாவத்தையைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர், மருதானை பகுதியில் சிறு வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தமது வீட்டுக்கு அருகில் வைத்து, ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டமையால், இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை நோயாளர்களைப் பார்வையிடும் போர்வையில் வைத்தியசாலைக்குப் பிரவேசித்த நபர் ஒருவர்,
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும், தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.