யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற சிலை கடத்தல் சம்பவங்களுடன் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த சிலருக்கு தொடர்பு! அதிர்ச்சி தகவல் வெளியானது..
யாழ்.மாவட்டத்தில் இந்து ஆலய விக்கிரகங்கள் களவாடப்பட்ட சம்பவத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்புகள் உள்ளதாக விசாரணைகளில் தொியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வலி,வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் இருந்து விக்கிரகங்கள் இராணுவத்தினர் மற்றும் கடற்படை புலானாய்வாளர்களின் உதவியுடன் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு களவாடப்பட்டவற்றில் சுமார் 20 சிலைகளை கொழும்பில் வைத்து பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். காங்கேசன்துறை குமார கோவிலின் பிள்ளையார் விக்கிரகம் களவாடப்பட்டமை தொடர்பில் முதலில் தகவல் வெளியானது.
குமார கோவில் காணியில் அடாத்தாக கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதி பாதுகாப்பு தரப்பினரின் அதீத கண்காணிப்புக்கும் உட்பட்டதாகும். இந்த தகவல் வெளியான நிலையில் மேலும் 4 சிலைகள் களவாடப்பட்டமை தொடர்பில்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மாவிட்டபுரம் - நல்லிணக்க புரத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவர் புலனாய்வு தகவல் அடிப்படையில் கைதானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஆலய விக்கிரகங்களை கொழும்பில் விற்பனை செய்தமை தொியவந்துள்ளது. அத்துடன் புத்துார் - நவக்கிரியை சேர்ந்த 25 வயது இளைஞனும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானார்.
யாழ்ப்பாணத்திலிருந்து விசேட பொலிஸ் அணி கொழும்புக்கு நேற்று முன்தினம் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தது. இதன் அடிப்படையில் 20ற்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் இந்த சிலை களவுடன் 3 இராணுவத்தினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரும் தொடர்புபட்டுள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. 30 சிலைகள் வரை யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டுள்ளபோதும் இதுவரை 5 சிலைகள் தொடர்பில் மட்டுமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.