பேருந்து விபத்தில் ஒருவர் பலி! விபத்து நடந்த இடத்தில் அடிதடி - வாள்வெட்டு, இராணுவம், அதிரடிப்படை, பொலிஸ் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள்..
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் கூடியவர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் வாள்வெட்டில் முடிந்ததுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார், இராணுவம், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் புத்தளம் - கொழும்பு வீதியில் பங்காதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரை சொகுசு தனியார் பஸ் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தை அடுத்து,
பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருடன் அங்கு வந்த இளைஞர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இதன்போது அங்கு வாளுடன் வருகை தந்த நபர் ஒருவர்,
அங்கிருந்த ஒருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, நிலைமை மேலும் மோசமடைய சம்பவ இடத்திற்கு இராணுவம், மேலதிக பொலிஸார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர்
சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ், விஷேட அதிரடிப் படையினர்
மற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.