நாட்டில் அரச பல்கலைகழகங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றில்லை! எதிர்காலத்தில் உயர்கல்வி வருமானம் ஈட்டும் துறையாக மாற்றப்படும், ஜனாதிபதி..
அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் பட்டங்களை விற்கும் பட்டக்கடைகள் என்ற பழைய போராட்டங்களில் எந்த அர்த்தமும் இல்லை. என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தின் 2021ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தொிவித்திருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், தற்போதைய உலகை வெற்றிகொள்வதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய திறன்களில் குறைந்த பட்சம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சில புதிய சீர்திருத்தங்கள் ஏற்கனவே நமது பல்கலைக்கழகங்களால் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக அதிகரித்தமை தற்போதைய அரசின் சாதனையாகும்.
இந்த அதிகரிப்பு இருந்த போதிலும், இலங்கையில் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக கல்விக்கான அணுகல் இல்லாமல் உள்ளனர்.
தகுதியான மாணவர்களுக்கு இடமளிக்கும் திறன் அரச பல்கலைக்கழக அமைப்பில் இல்லாததே இதற்குக் காரணம். எமது இளைஞர்கள் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இப் பல்கலைக்கழகங்கள் அரச பல்கலைக்கழகங்களாக மாத்திரம் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. உலகில் உள்ள அனைத்து சிறந்த பல்கலைக்கழகங்களும் அரச பல்கலைக்கழகங்கள் அல்ல.
அவற்றில் பல சுயாதீன சுயநிர்வாக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியை மையமாகக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அத்தகைய நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்படக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் பட்டங்களை விற்கும் பட்டக்கடைகள் என்ற பழைய போராட்டங்களில் எந்த அர்த்தமும் இல்லை.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் தொழில் சந்தையில் வாய்ப்புகளை வழங்கும் திறன் இல்லாத பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள்.
நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கு உகந்த சூழலை உருவாக்குவது, சர்வதேச தரத்தில் உள்ள பிராந்திய உயர்கல்வி நிறுவனங்களைக் கவருவதற்கு இலங்கைக்கு உதவும்.
காலப்போக்கில், இலங்கையின் உயர்கல்வித் துறையானது, பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் வருமானத்தை ஈட்டும் துறையாக மாற்றப்படும்.
இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து, உயர்கல்வி கட்டமைப்பில் இந்த விரிவான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார்.