திருமண நிகழ்வுகள், இறுதிச்சடங்குகள், தேவையற்ற பயணங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் புதிய சுகாதார நடைமுறை வெளியானது..!
திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், கூட்டங்கள், தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதலை பதில் சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.
புதிய நடைமுறைகள் நாளை டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டங்கள் நடத்த 150 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அறை அல்லது மண்டபத்தின் ஆசனங்களின் அளவில் மூன்றில் ஒரு பங்கு அழைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
அத்துடன் நிகழ்நிலை கூட்டங்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் இருக்கைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளுக்கே விருந்தினர்களையே அழைக்க முடியும்.
எனினும் 200 விருந்தினர்களை விஞ்சக் கூடாது. திறந்த வெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில் ஆகக் கூடியது 20 பேரே ஒரே நேரத்தில் பங்கேற்க முடியும்.
உணவகங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர்.
திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர். பாடசாலைகள் கல்வி அமைச்சின் வழிகாட்டலிலும் உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் வழிகாட்டலிலும் இயங்க முடியும்.