தான் இன்னும் ஓய்வு பெறவில்லை!! -தொடர்ந்து விளையாடுவேன் என்கிறார் கெய்ல்-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து வெளியான தகவல்களை மறுத்துள்ள அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், தான் மீண்டும் ரி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் 42 வயதான கிறிஸ் கெய்ல் இம்முறை நடந்து வரும் ரி-20 உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரகாசிக்கவில்லை.
அவரின் ஆட்டத்திறன் பாதிப்பும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாக துடுப்பாட்ட மட்டையை உயர்த்தி காட்டியபடி சென்றார்.
எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சக வீரர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தி கட்டித்தழுவி வரவேற்றனர். இதே போல் களத்தடுப்பில் ஈடுபடும்போது உற்சாகமாக வலம் வந்த கெய்ல் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் கூட சந்தோஷமாக அரட்டை அடித்தார்.
இவற்றை பார்க்கும் போது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக கிறிஸ் கெய்ல் விளையாடிய கடைசி போட்டி போன்று தோன்றியது. வர்ணனையாளர்களும் இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறினர்.
எனினும் போட்டிக்குப் பிறகு ஐ.சி.சி உடனான பேஸ்புக் லைவ் அரட்டையில் கிறிஸ் கெய்ல், தான் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும் மேலும் ரி-20 உலகக் கிண்ணத்தில் விளையாட விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.