SuperTopAds

அரச சார்பானவர்கள் எதையும் செய்யலாம்- தண்டனை கிடைக்காது!

ஆசிரியர் - Admin
அரச சார்பானவர்கள் எதையும் செய்யலாம்- தண்டனை கிடைக்காது!

லொஹான் ரத்வத்தையின் நடவடிக்கைகள் மூன்று விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளன என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

லொஹான் ரத்வத்தையின் நடவடிக்கைகள் மூன்று விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளன. ஒன்று குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை என்ற மனோபாவம் வெளியாகியுள்ளது. 

அது தான் மிகக் கேவலமான ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு தமது பதவியை இராஜினாமா செய்துவிட்டு எதுவும் நடவாதது போல் சுதந்திரமாக இவர் திரிகின்றார். சில காலத்தின் பின்னர் வேறொரு துணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற திடமான நம்பிக்கை கூட அவருக்கு இருக்கலாம்.

இக் குற்றத்தைப் புரிந்தவர் ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அவர் மீது சட்டம் பாய்ந்திருக்கும். அவர் கைதாகியிருப்பார். ஆனால் அரச சார்பானவர்கள் எதையும் செய்யலாம் தண்டனை கிடைக்காது என்ற மனோபாவம் தற்போது மேலோங்கி வருகின்றது.

இரண்டு – இந்த அரசாங்கத்தின் கீழ் அரச சார்பான அரசியல்வாதிகளுக்கு விதிகள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் என்று எதுவுமே கிடையாது என்பது நிதர்சனம். அவர்கள் நினைத்ததைச் செய்ய முடியும். அரச அலுவலர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும். கட்டுப்பாடின்றி சிறைச்சாலைக்குள் நுழையலாம். ஹெலிகொப்டரில் இரவில் பயணஞ் செய்யலாம். நன்றாகக் குடித்துவிட்டுப் போய் சிறைக் கைதிகளை அவர்களின் சிறைக் கூண்டுகளில் இருந்து வெளியே வரச்செய்து அவர்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்கலாம் என்றாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் கூட ஒருவர் முறை தவறி நடந்து கொள்வதாக தெரியவருகின்றது. இவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் தண்டனை வழங்குவார்கள்.

மூன்று – தமிழ் மக்களை இழிவுபடுத்துவதை எந்தச் சிங்கள அரசியல்வாதியும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. முஸ்லீம்களுக்கும் அண்மையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மலையகத் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. முஸ்லீம்களும், மலையகத் தமிழ் மக்களும் சிங்களவர்களுடன் சேர்ந்தே இதுவரை காலமும் பயணித்து வந்தனர். இப்போது நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. எனவே பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இடையே துருவமயமாக்கல் நடைபெறத் தொடங்கியுள்ளது.

லொஹான் ரத்வத்தை உடனே கைது செய்யப்பட வேண்டும். அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உரிய விசாரணையின் பின் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் அது பறிக்கப்படவேண்டும்.

உடனே சம்பந்தப்பட்ட சி.சி.ரி.வி. கமெராக்கள் கையேற்கப்பட்டு பாதுகாப்பில் வைத்திருக்கப்பட வேண்டும். லொஹான் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டாலும் விசாரணையின் போது தமிழ் அரசியற் கைதிகள் சாட்சிகளாக உண்மை கூறினாலும் அவர்களின் சாட்சியம் பக்கச் சார்புடையதென்று கூறி அவரை விடுதலை செய்ய பல நீதிபதிகள் காத்திருக்கக்கூடும்.