சிறைக்குள் அனுமதித்தோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
துப்பாக்கியுடன் சிறைக்குச் செல்ல அனுமதித்தோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஓர் இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் செல்வதை சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என கேள்வியெழுப்பினார்.
அதிகாரிகளாக இருந்தாலும் சரி, சிறைச்சாலைக்குள் அங்கிகாரம் அளிக்கப்பட்டோரை தவிர, அரசியல்வாதிகளோ எந்தவோர் அதிகாரியோ துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதித்தது தவறாகும் எனவும், அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் விருந்தினர் விடுதி அல்ல எனத் தெரிவித்த அவர், துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் தனியாக செல்லாது, தனது நண்பர்களுடன் சென்று இருக்கின்றார் எனவும் கூறினார்.
'வெறுமனே அநுராதபுரம் சிறைக்கு மாத்திரமல்ல வெலிக்கடை சிறைக்கு சென்றதாகவும் அங்கு தமிழ் அரசியல் கைதிகளினை மிரட்டியதாகவும் அவர்களை முழங்காலில் இருத்தியதாகவும் கூட ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 'ஆகவே இந்த நடவடிக்கை தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவர் இராஜாங்க அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர். ஆகவே இவர் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒரு சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் சென்று பேசுவதற்கு இவருக்கு உரிமை கிடையாது' எனவும் சுரேஷ் கூறினார்.