இனியாவது ஒரே குரலில் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்!
எதிர்காலத்திலாவது ஒரே குரலில் எமது கோரிக்கைகளை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம். அதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் கூறினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்றுவரும் அவர், அங்கிருந்து கொண்டே இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத் தொடர் குறித்து கருத்து வெளியிடும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தம்மைப் பொறுத்தவரையில் தாம் எதனைக் கேட்க வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும் எனவும் சர்வதேசம் அதனை அங்கிகரிக்க வேண்டிய நிலையை நோக்கி தாம் பயணிக்க வேண்டும் எனவும் கூறினார்.
'அந்தவகையில் தான் கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் பட்சலெட் அம்மையார் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார். அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டு இலங்கை அரசின் குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்ற போது, அதற்குத் தண்டனை வழங்குவது மட்டும் போதாது, எமக்கு ஒரு ஈடுசெய் நீதி வழங்கப்பட வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணங்களும் கிடைக்க வேண்டும்' எனவும், அவர் கூறினார்.
ஈடுசெய் நீதியாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடிய நிலைமையை சர்வதேச நாடுகள் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஒரே குரலில் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதனை வலியுறுத்தக்கூடிய நிலை மூன்று பிரதான தரப்புகளில் இரண்டு தரப்புக்களில் இருந்தே வந்திருக்கின்றது எனவும் கூறினார்.
எதிர்காலத்திலாவது ஒரே குரலில் எமது கோரிக்கைகளை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தினால் நாம் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.