SuperTopAds

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!!

ஆசிரியர் - Admin
வடக்கு கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!!

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் காணாமால் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க முடியுமென்றும் அதனை பெறுவதற்கு நாங்கள் முனைப்பு காட்ட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று ஆகஸ்ட் 30 உலக காணமல் ஆக்கப்ட்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும்நிலையில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஊடக அறிக்கையிலே,இன்றைய தினம் உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான நாள்.

இலங்கை தீவை பொறுத்த வரையில் உலகிலே இன்றைக்கு கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இது எங்களுடைய போராட்டங்கள் தீவிரமடைந்த காலத்திலேயே 1970 களில் ஒரு சிலராகவும் 1980 களில் ஒரு சில டசின் கணக்காகவும் காணப்பட்ட விடயங்கள் 1990 களில் இன்னும் தீவிரமடைந்து நூற்று கணக்கிலே சென்ற நிலமையிலே 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயிரக்கணக்கில் காணாமல் போகின்ற நிலைமை உருவாக்கப்பட்டு 2009 கொடிய போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இது வரை தமிழ் தரப்பில் இருந்து கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 20000 என ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவைக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். போர் நடைபெற்று கொண்டிருந்த பொழுது பல இடங்களிலே கிழக்கு மாகாணம் வடக்கிலே முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களில் 600 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

1996 இல் காணாமல் போனோர் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகின்ற சூழ்நிலையிலே தான் 2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் சுமார் 6500 பேரை இராணுவத்தினரிடம் அவர்களது மனைவிமாரோ பெற்றோரோ சகோதரர்களோ கையளித்தவர்களை பற்றி கூட இன்னும் எந்த விதமான தகவல்களும் இல்லை.

இந்த சூழ் நிலையின் பின் தான் இவர்களை கண்டு பிடிக்க எத்தனை குழுக்களை நியமித்து இருந்தாலும் அதிலிருந்து பின் வாங்கினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே 30/1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசு சொன்னாலும் அதன் பிறகு அவர்கள் பின் வாங்கினார்கள்.

இந்த சூழ் நிலையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி வருட கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு ஏற குறைய 2000 நாட்கள் வீதிகளில் இருந்து போராடி வருகிறார்கள்.

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும். அதனை பெறுவதற்கு நாங்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்தாத வரை இதற்கான நீதி கிடைக்க வாய்ப்பில்லை.

இல்லாவிட்டாலும் கூட அதை நோக்கி பயணிக்கின்ற விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இழைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க்குற்றங்கள்,மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஈடு செய்தி நீதி ( பரிகார நீதி ) வடக்கு கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுடைய தலைவிதியை சர்வதேச நாடுகள் ஐ.நா.வினுடைய ஏற்பாட்டிலே,ஐ.நா.வினுடைய மேற்பார்வையிலேயே செய்யப்படவேண்டும்.

இதுதான் அரசியல் தீர்வுக்கான வழி காணாமல் போகச் செய்யப்பட்ட அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களுடைய நீதியும், நிவாரணமும், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையை நோக்கி இந்த தினத்திலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற விடயத்திற்க்கு இன்னும் சில குறுகிய காலத்துக்குள்ளே நீதி கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றுள்ளது.