நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலம் மீட்பு..! பொலிஸார் தீவிர விசாரணையில்..
கிளிநொச்சி - கோவிந்தன் கடை சந்தியில் உள்ள வாய்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாயக்காலில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதை அங்கு சென்றவர்கள் அவதானித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் கிளிநொச்சி, திருவையாறு வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார் (வயது-30) எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக காணப்பட்ட இடத்திற்கு அண்மையாக உள்ள கரையில் அவருடைய உடைகள், காலணி என்பன காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேற்றைய தினம் குறித்த நபர் வாய்க்காலில் குளிப்பதற்காக இறங்கிய நிலையில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.